நடக்குமா...?

Thursday, January 22, 2009

'ஐ.டி. துறையின் இந்தப் பின்னடைவுகூட நல்லதுக்குத்தான். இனியேனும் உலக நாடுகளுக்கு சேவை செய்யாமல், உலகத் தரத்துக்கு இணையான வர்த்தகச் சேவையை நாமே துவங்கி, நாலா திசையிலும் பரவச் செய்ய வேண்டும்' என்கிற வேண்டுகோளையும் அந்தப் பேட்டியில் முன்வைத்திருந்தார் பாலகுருசாமி.
ஐ.டி நிறுவனங்கள் இன்றைக்கு மனதில் கொள்ள வேண்டிய ஆலோசனை இது!

Read more...

ஐ.டி பற்றி அவள் விகடனில் வந்த கட்டுரை

சினிமாக்களில் வருவதுபோல ஒரே இரவில் பலரது வாழ்க்கையை உயர்த்திப் போட்ட அதே ஐ.டி. வேலை, இன்றும் ஒரே நாளில் அவர்கள் வாழ்க்கையை நிலைகுலைய வைத்திருக்கிறது.
உலகப் பொருளாதார வீழ்ச்சி, சுமார் 7,000 கோடி அளவில் சத்யம் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் ஊழல்.. 'விப்ரோ' நிறுவனத்துக்குக் கொடுத்து வந்த வேலையை நிறுத்திக் கொண்ட உலக வங்கி.. என்று ஊடகங்களில் வரும் தகவல் கள் இப்போதுதான் பயமுறுத்து கின்றன.. ஆனால், இந்திய தகவல் தொழில் நுட்பத் துறையின் தலைநகரமான பெங்களூருவில், சில மாதங்களுக்கு முன்பேயே துவங்கி விட்டிருக்கிறது இந்த ஐ.டி வீழ்ச்சி!
'கடந்த நான்கு மாதங்களில் மட்டும் சிறிதும் பெரிதுமாக சுமார் முந்நூறு ஐ.டி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.. கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களுமே ஆள் குறைப்பில் இறங்கி விட்டன. விரைவில் இந்தியா முழுக்க இருக்கிற ஐ.டி நிறுவனங்கள் பாதிக்கப்படும்!' என்கிற அதிர்ச்சித் தகவல் நம் காதுகளை வந்தடைந்தது!
விஷயத்தின் தீவிரம் நம்மை உலுக்க, பெங்களூருவின் ஐ.டி நிறுவனங்களில் வேலை பார்க்கிற.. பார்த்த.. தமிழர்களை சந்தித்துப் பேசினோம்.
அனைவருமே புகைப்படத்துக்கு மறுத்துத்தான் பேசி னார்கள். இல்லை.. இல்லை.. தங்கள் மனக் குமுறல்களைக் கொட்டினார்கள்.
''நான் சென்னையிலிருந்து பெங்களூரு வந்து ஏழு வருஷமாச்சு.. என்னோட ஆரம்ப சம்பளம் 20,000 ரூபா. கடைசியா எனக்கு கம்பெனி கொடுத்த புரமோஷன்ல அறுபதாயிரம் ரூபாயா ஆகியிருந்தது என் சம்பளம்..'' என்கிற மீரா கிருஷ்ணனுக்கு இன்றைக்கு வேலை இல்லை.
''வீட்டு வாடகை, சாப்பாடு, போக, வர கார் வசதினு எல்லாமே கம்பெனி கொடுத்துடும். வாங்குற சம்பளத்துல எனக்குனு ஒரு செலவு கிடையாது. மூணு வருஷத்துக்கு முன்னால கல்யாணமாகி, குழந்தை பிறந்து சந்தோஷமா போய்ட்டு இருந்தது வாழ்க்கை.. திடீர்னு ஒரு நாள் எங்க எல்லாரையும் கூப்பிட்டு 'இனிமே கம்பெனியை நடத்த முடியாது'னு சொல்லிட்டாங்க. அவ்வளவுதான். மறுநாள் என்னை பிக்கப் பண்ண கார் வரல..
வெளியில வேலை தேடுறேன். கிடைக்கல. என்னோட இத்தனை வருஷ அனுபவமும் சுத்த வேஸ்ட்ங்கிறது இப்போதான் தெரியுது'' - கட்டுப்படுத்தவே முடியாமல் கேவுகிறார் மீரா.
வேலையிலிருந்து முதலில் தூக்குவது திருமணமான பெண்களைத்தானாம்! அடுத்து, திருமணமான ஆண்களையாம்! அதுபற்றிச் சொல்லி வருந்தினார் தர்மபுரியிலிருந்து இங்கு வந்து வேலை செய்கிற கல்பனா. ''நூறு பேர் இருந்த இடத்துல இருபது, முப்பது பேரை வச்சு வேலை வாங்கியாகணும். அப்படின்னா, அவங்க ராத்திரி, பகல் பார்க்காம வேலை செய்றவங்களா இருக்கணும். கல்யாணமான பெண்கள்னா, குறிப்பிட்ட நேரத்துக்குள்ள வீட்டுக்குப் போறதுலயே நோக்கமா இருப்பாங்க. குடும்பம், குழந்தை, பிரசவம்னு லீவ் எடுப்பாங்க. அதனால அவங்களைத்தான் முதல்ல வெளியேத்துறாங்க.
கல்யாணமான ஆண்களும்கூட பேச்சுலர்ஸ் அளவுக்கு ஆபீஸ்ல நேரம் செலவழிக்க முடியாது இல்லையா? அதனால, கொஞ்சம்கூட ஈவு, இரக்கமே இல்லாம, 'ஸ்டார் பர்ஃபார்மரா' ('பிரமாதமாக வேலை செய்கிறவர்' என்று நிறுவனமே ஸ்டார் அந்தஸ்து கொடுக்குமாம்) இருந்தாக்கூட தூக்கிடுறாங்க. எங்க கம்பெனியில போன நவம்பர் மாசம், 30 வயசைத் தாண்டினவங்க எல்லாரையும் வேலையை விட்டு எடுத்துட்டாங்க.. நாங்களும் பயந்துட்டுத்தான் இருக்கோம்'' என்றவர், ஒரு கண்ணீர்க் கதையைச் சொன்னார்..
''எங்க டீம் லீடர் அவர். பிரமாதமா வேலை செய்வார். போன செப்டம்பர்லதான் அவருக்குக் கல்யாணம் ஆச்சு. அவர் மனைவி இப்போ கர்ப்பமா இருக்காங்க. அவருக்கும் வேலை போய்டுச்சு. போன வாரம் தற்செயலா அவரோட வீட்டுக்குப் போயிருந்தேன். ஐயோ! அந்தக் கொடுமையை என்னனு சொல்லுவேன்! கையில இருந்த காசு மொத்தமும் செலவழிஞ்சு போக, மூணு நாள் பட்டினியா கெடந்திருக்காங்க ரெண்டு பேரும். 'பேசாம செத்துப் போய்டலாம்போல இருக்கு'னு அவர் குலுங்கிக் குலுங்கி அழ, என்னால தாங்கவே முடியல.
ஆபீஸ்ல ஒரு பாஸா மட்டும்தான் அவரை நான் பார்த்திருக்கேன். டீம்லயே 'ஜூனியர் மோஸ்ட்' ஆன என்கிட்ட அவர் அப்படி அழுதது.. ச்சே! இந்த உலகம்.. பணம்னு எல்லாத்து மேலயும் வெறுப்பு வந்துடுச்சு'' என்கிறார் கண்ணீர் மல்க!
கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதையாக வெளிவரும் ஒவ்வொரு கதையுமே இதயத்தை நொறுக்குகிறது.
''எதுவா இருந்தாலும் இ-மெயில்தான். இனிமே எல்லாரும் பத்து மணி நேரம் கண்டிப்பா வேலை பார்க்கணும். கார், சாப்பாடு வசதில்லாம் கிடையாது'ன்னு ஒரு இ-மெயில் அனுப்பிட்டா மறுநாளே கையில டிபன் பாக்ஸோட டவுன் பஸ் பிடிச்சு ஆபீஸ் வந்துடணும். அப்படித்தான் வந்துக்கிட்டு இருக்கோம்'' என்றார் ரேவதி.
பெங்களூருவின் பெரிய ஐ.டி நிறுவனம் ஒன்றில் மாதம் 80,000 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்த பிரகாசம், இன்று 7,000 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குப் போகிறார்..
''ஐ.டி. துறையில சம்பளம் ஜாஸ்தினு வெளியில இருக்குறவங்களுக்குத் தோணும். ஆனா, அதுக்கேத்த கமிட்மென்ட்ஸ் எங்களுக்கு இருக்கும். காருக்கு மட்டும் மாசம் இருபதாயிரம் ரூபா இ.எம்.ஐ கட்டினேன். வேலை போனதும் காரை வித்துட்டேன். ஆனாலும் கார் கடன் இன்னும் முழுசா அடையல. அதுதவிர, கிரெடிட் கார்டு கடன் இருக்கு. ஃபர்னிச்சர், மைக்ரோவேவ் அவன், டிஜிட்டல் கேமரா, ஹோம் தியேட்டர்னு கண்ட பொருளையும் வாங்கிக் குவிச்சிருக்கேன். இதையெல்லாம் வித்தா பைசாகூட தேறாது. தலைக்கு மேல கடனை வச்சுக்கிட்டு திண்டாடுறேன்..'' என்றவர் நிறுத்தி, ''என்னையும் என் மனைவியையும் விடுங்க. எப்படியோ போறோம். பீட்ஸாவும் பர்கருமா சாப்பிட்டுப் பழகின குழந்தைக்கு திடீர்னு தினம் தினம் ரசம் சாதம் போடுற கொடுமை எந்தத் தகப்பனுக்கும் வரவே கூடாதுங்க.. போன மாசம் முழுக்க ரெண்டு வேளை சாப்பாடுதான். கடனை அடைச்சாத்தான் நிம்மதி கிடைக்கும்!'' என்றார் கலங்கும் கண்களுடன்.
ஐ.டி. நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரியாகப் பணிபுரியும் பிரசாந்த் குமார், இந்த அவல நிலையின் காரணம் பற்றியும் ஐ.டி. துறையின் எதிர்காலம் பற்றியும் பேசினார்..
''தொண்ணூறுகளின் இறுதியில் பெங்களூருவில் 600-க்கும் மேற்பட்ட ஐ.டி. கம்பெனிகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால் சென்டர்கள், பி.பி.ஓ-க்கள் இருந்தன. இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பெங்களூருவைத் தேடி வந்து குடியேறினர் மக்கள்.
ஆனால், சமீபத்தில் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் தொடர் சரிவின் காரணமாக, உலகெங்கும் ஐ.டி. கம்பெனிகள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. பெங்களூருவில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட கம்பெனிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் 8,500 பேர் வேலை இழந்துள்ளனர். சம்பளக் குறைப்பு, ஆட்குறைப்பு, சலுகைகள் குறைப்பும் இதனால்தான்.
சமீபத்தில் 'யுனைட்ஸ்' என்கிற தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவை வழங்குவோர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இன்னும் ஆறு மாதத்தில் இந்தியாவில் மட்டும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை இழக்க நேரிடும்' என்று அறிவித்துள்ளது. கவலை தரும் அறிக்கை இது'' என்றவர்,
''இருந்தாலும் '2009-ல் தகவல் தொழில் நுட்பத்துறை மீண்டும் கோலோச்சும்' என்றும் ஒரு சாரார் சொல்கிறார்கள். நம்பிக்கைதானே வாழ்க்கை. காத்திருப்போம்'' என்றார். இரவிலும் வேலை செய்யும் இவர்களின் எதிர்காலத்துக்கு விடியல் வருமா?

Read more...

சத்யம் ஒரு சரிவு

Sunday, January 11, 2009

கடந்த நாலு நாளா ஜூனியர் விகடன் முதல் அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் வரை தலைப்பு செய்திகளில் சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் வீழ்ச்சி பற்றி தான் ஒரே புலம்பல். இதற்கு காரணம் என்ன ? ராமலிங்க ராஜு கைது .. என செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறது. இதெல்லாம் பற்றி நாமும் மீண்டும் பேச வேண்டாம். ஆனால் இந்த பிரச்சனை பற்றி சில செய்திகள் இவ்வாறும் சொன்னது... "இந்தியாவின் மதிப்பை உலக அரங்கில் சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனம் குலைத்துவிட்டது..". "மென்பொருள் துறையின் வீழ்ச்சி இந்தியாவில் ஆரம்பமா..?"
இவர்களுக்கு ஒரு மென்பொருள் துறையில் உள்ள எனக்கு சில கேள்விகள்.
1. இந்தியாவில் சத்யம் நிறுவனம் செய்த குளறுபடியால் இந்தியாவின் மானம் உலக அரங்கில் போனதென்றால்.. இதை விட பெரிய அளவில் குளறுபடி பண்ணி கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு மேலாக நிர்வாகம் நடத்திய அமெரிக்காவைச் சேர்ந்த LEHMAN BROS. நடத்திய குளறுபடிகளால் பாதிக்கப் பட்டவர்கள் இதை விட பல மடங்கு அதிகம்..? அது மட்டுமல்ல அந்த நிறவனத்தின் வீழ்ச்சியை ஏன் ஊடகங்கள் இந்த அளவுக்கு பெரிது படுத்த வில்லை ..? அமெரிக்காவின் மானம் LEHMAN BROS.-ஆள் போனதை விட, சத்யம் நிறுவனத்தின் வீழ்ச்சியால் இந்தியாவின் மானம் பெரிய அளவில் போகிறது.
2. மென்பொருள் துறை மீது நிறைய பேருக்கு ஒரு வித எரிச்சல் நீண்ட காலமாகவே இருந்து வந்தது அவர்களின் வரிசையில் வந்த சில வயித்தெரிச்சல் கும்பலின் வாக்காகவே இதை எடுத்துக் கொண்டாலும், நம்மோட பதில் இதுதான், உழைப்பாளிகளே மென்பொருளில் வேலை பார்ப்பவர்கள் ஏதோ எ.சி-யில் உட்கார்ந்து கொண்டு லட்சம் லட்சமாக சம்பாதிப்பவர்கள் என்ற உங்களது எண்ணத்தை தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள், அப்படி உங்களுக்கு யாரவது சொல்லியிருந்தால் அவர்களை இந்த விஷயத்தையும் படிக்கச் சொல்லுங்கள். நீங்களோ அல்லது வேறு யாருமோ நினைப்பதை போல கம்ப்யூட்டரை முறைத்து பார்த்து கொண்டிருந்தால் வேலை நடந்து விடாது. காலையில் போனவுடன் ஆரம்பிப்பார்கள் எங்கள் எஜமானர்கள் (அதாங்க PROJECT LEADERS) நேத்து நீ அடிச்ச கொடு வேலை செய்யலை ... என்னன்னு பார்த்து நீ உடனே சரி பண்ணலைன்னா இன்னைக்கு சாயந்திரமே உன்னுடைய வேலை காலி. அப்படின்னு கூலா சொல்லிடுவாரு. அதே மாதிரி சாயந்திரமே வேலை போயிடும். அதை நினைச்சு பயந்து கிட்டே இருக்கணும் ஒவ்வொரு நாளும். இதை விட கொடுமை என்னங்க இருக்குது. அதுவும் இப்ப இருக்குற பொருளாதார நெருக்கடில இவுங்க நெருக்கடி இன்னும் அதிகமா இருக்குது. இது மட்டுமில்ல வெள்ளைகாரர்களுக்கு கோபம் வராத அளவுக்கு நடந்துக்க தெரிஞ்சுருக்கனும். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா லட்ச ரூபா சம்பளம் கொடுத்தால் இதெல்லாம் பெரிய விஷயமில்லை. அப்படின்னு சொன்னீங்கன்ன நாளைக்கே உங்களுக்கு அப்படி ஒரு வேலை ரெடி-யா இருக்குன்னு வச்சுக்குங்க. அந்த டென்ஷன் எல்லாம் பட்டால் தான் தெரியும். இதை விளையாட்டா சொல்லலை சத்யமா சொல்றேன். (நான் நிஜ "சத்யமா"தான் சொல்றேன்). அப்படி ஏன் கஷ்ட்ட படுற பேசாம இங்க வந்து விவசாயம் பார்க்க வேண்டியது தானே, அப்படின்னு நீங்க கேட்கலாம், சரி எல்லாரும் விவசாயம் பார்த்தால் என்ன ஆவுறது..? ஏற்கனவே கரும்பு விலையை உயர்த்த சொல்லி விவசாயிங்க போராடுறாங்க. மென் பொருள் துறை என்பது ஏதோ சுகவாசிகளின் இருப்பிடம் போல் பேசுறதை முதலில் நிப்பாட்டுங்க. சுருக்கமா சொல்லனுமின்னா விவசாயிகள், மூட்டை தூக்குறவங்க உடம்புக்கு வேலை கொடுத்தால் நாங்க மூளைக்கு வேலை கொடுக்கிறோம். அவ்வளவுதான். அது மட்டுமில்லாம நம்ம நாட்டுல இருந்து ஒரு காலத்துல வெள்ளையர்கள் கொண்டு சென்ற செல்வங்களை எல்லாம் நாங்க டாலரா இந்தியாவிற்குள் கொண்டு வருகிறோம். இதை விட என்ன பண்ணனுமின்னு நினைக்கிறீங்க..? சரி இதை விடுங்க, நம்ம கதைக்கு வருவோம், மென்பொருள் அழிவதில் சந்தோசம் கொள்ளும் கனவான்களே தயவு செய்து உங்க எண்ணத்தை மாத்துங்க, மேலும் அது இந்த மாதிரி ஒரு நிறுவனம் கணக்கு குளறு படியில் செய்த தவறால் மாட்டி இருக்கிறார்கள். மென்பொருளில் எந்த பிரச்சனையும் கிடையாது. கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லனுமின்னா இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்த காங்கிரஸ் ஒரு தேர்தலில் தோற்றால் உடனே மக்களுக்கு தேசப் பற்று இல்லை என்று அர்த்தமா..? அதே மாதிரி தான் இதுவும்.

Read more...

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP